Muslim99Muslim99
← Tafsir library

8. Al-Anfaal

The Spoils of War · Medinan · 75 ayahs

سُورَةُ الأَنفَالِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 75

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَنفَالِ ۖ قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَصْلِحُوا۟ ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤْمِنِينَ

போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.

தூதரே!- உம்முடைய தோழர்கள் போர்ச் செல்வங்களைக் குறித்து - அவற்றை எவ்வாறு பங்கிட்டீர்கள்? யாருக்கெல்லாம் வழங்குவது? என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவீராக: “போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியன. அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவற்றை வழங்குவார்கள்; பங்கிடுவார்கள். முழுமையாக அடிபணிவதே உங்கள் மீதுள்ள கடமையாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களிடையே காணப்படும் பிரவினையையும் விரோதத்தையும் அன்பால், அழகிய பண்பால், மன்னிப்பால் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களை விட்டு விலகியிருப்பதற்கும் தூண்டுகிறது. இக்கேள்வி பத்ருப் போருக்குப் பின் கேட்கப்பட்டதாகும்.

2

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَٰنًۭا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் பின்வரும் பண்புகளையுடையோரே. அவர்களிடம் அல்லாஹ்வைக் குறித்து நினைவு கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவார்கள். அவனுடைய வசனங்கள் அவர்களிடம் படித்துக் காட்டப்பட்டால் அவற்றில் சிந்தனை செலுத்துவார்கள். அதனால் அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். நன்மைகளைப் பெறுவதற்கும் தங்களை விட்டுத் தீங்குகளை அகற்றுவதற்கும் தங்கள் இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.

3

ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ

அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.

அவர்கள் தொழுகையை பரிபூரணமாக அதனுடைய நேரங்களில் நிறைவேற்றுகிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து கடமையான முறையிலும் உபரியான முறையிலும் செலவும் செய்கிறார்கள்.

4

أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّۭا ۚ لَّهُمْ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ

இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.

இந்த பண்புகளை உடையவர்கள்தாம் ஈமானின் பண்புகளையும் இஸ்லாத்தின் வெளிப்படையான பண்புகளையும் ஒருசேர பெற்றிருப்பதால் உண்மையான நம்பிக்கையாளர்களாவர். இவர்கள் தங்கள் இறைவனிடம் உயர்ந்த அந்தஸ்தையும் பாவங்களுக்கான மன்னிப்பையும் கண்ணியமான உணவையும் கூலியாகப் பெறுவார்கள். இவை அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள அருட்கொடைகளாகும்.

5

كَمَآ أَخْرَجَكَ رَبُّكَ مِنۢ بَيْتِكَ بِٱلْحَقِّ وَإِنَّ فَرِيقًۭا مِّنَ ٱلْمُؤْمِنِينَ لَكَٰرِهُونَ

(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.

நீங்கள் போர்ச் செல்வங்கள் குறித்து கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்ட பிறகு அவற்றைப் பங்கிடும் உரிமையை அல்லாஹ் உங்களிடமிருந்து பறித்து தன்னிடமும் தன் தூதரிடமும் அந்த உரிமையை வைத்துக் கொண்டதைப் போல - தூதரே! - நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினர் வெறுத்த போதிலும் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக மதீனாவிலிருந்து புறப்படும்படி உம் இறைவன் வஹியின் மூலம் உமக்குக் கட்டளையிட்டான்.

6

يُجَٰدِلُونَكَ فِى ٱلْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلْمَوْتِ وَهُمْ يَنظُرُونَ

அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).

தூதரே!- நம்பிக்கையாளர்களில் இந்த பிரிவினர் இணைவைப்பாளர்களுடன் போர் நிகழும் என்பது தெளிவான பின்னரும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதைப் போல உம்முடன் விவாதம் புரிகிறார்கள். இது அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாததாலும் போருக்குப் புறப்படுவதை கடுமையாக வெறுத்ததனாலேயாகும்.

7

وَإِذْ يَعِدُكُمُ ٱللَّهُ إِحْدَى ٱلطَّآئِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ ٱلشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَيَقْطَعَ دَابِرَ ٱلْكَٰفِرِينَ

(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

விவாதம் புரியும் நம்பிக்கையாளர்களே!- இணைவைப்பாளர்களின் இரு கூட்டத்தினரில் ஒன்றை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள். அவை வியாபாரக் கூட்டமும் அது சுமந்துவரும் பொருட்களை கனீமத்தாக பெறல் அல்லது அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்களுடன் போரிட வந்த கூட்டத்துடன் போரிட்டு அவர்களை வெல்வதுமாகும். இலகுவாக போரின்றி மடக்கிவிடலாம் என்பதனால் வியாபாரக் கூட்டத்தைப் பிடிப்பதையே நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ் இஸ்லாத்தின் பலம் மேலோங்குவதற்காக இணைவைப்பாளர்களின் தலைவர்களை அழிக்கவும் அவர்களில் பெரும்பாலோரை கைதிகளாகப் பிடிக்கவும், போர் செய்யுமாறு உங்களை ஏவி, சத்தியத்தை சத்தியம் எனக் காட்ட நாடுகிறான்.

8

لِيُحِقَّ ٱلْحَقَّ وَيُبْطِلَ ٱلْبَٰطِلَ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).

இஸ்லாம் உண்மையானது என்பதற்கான சாட்சிகளை உண்டாக்கி அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மேலோங்கச் செய்து, சத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் அசத்தியத்தை அது தவறு என்பதற்கான அத்தாட்சிகளை ஏற்படுத்துவன் மூலம், அசத்தியம் எனக் காட்டவும் விரும்புகிறான். இணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் சத்தியத்தை மேலோங்கச் செய்தே தீருவான்.

9

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍۢ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُرْدِفِينَ

(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.

பத்ரு உடைய நாளில் அல்லாஹ்விடம் உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் உதவி தேடியதை நினைவுகூருங்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான். ஒருவரையொருவர் பின்தொடர்ந்து வந்த ஆயிரம் வானவர்களைக் கொண்டு அவன் உங்களுக்கு உதவிசெய்தான்.

10

وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே!- வானவர்களைக் கொண்டு உதவி புரிவதை அவன் உங்கள் எதிரிக்கு எதிராக உங்களுக்கு அவன் உதவி செய்வான் என்ற நற்செய்தியாகவே ஆக்கியுள்ளான். மேலும் வெற்றியை உறுதியாக நம்பி உங்கள் உள்ளங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவும் அவ்வுதவியைச் செய்தான். வெற்றி ஆள் பலம் ஆயுத பலத்தைக் கொண்டல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்தே வெற்றி கிடைக்கிறது. அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் வழங்கும் சட்டங்களில், அமைத்த விதிகளில், அவன் ஞானம்மிக்கவன்.

Al-Anfaal 8:10Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.