۞ وَٱعْلَمُوٓا۟ أَنَّمَا غَنِمْتُم مِّن شَىْءٍۢ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ ٱلْفُرْقَانِ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்கிளிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
நம்பிக்கையாளர்களே!- அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர்செய்து நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய செல்வங்களை ஐந்து பங்காகப் பிரிக்க வேண்டும். அதில் நான்கு பங்குகள் போரிட்ட வீரர்களிடையே பங்கிடப்பட வேண்டும். ஐந்தாவது பங்கு ஐந்தாகப் பங்கிடப்பட வேண்டும். ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. இது முஸ்லிம்களின் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பங்கு முஹம்மது நபியின் உறவினர்களான ஹாஷிமின் குடும்பத்தார், முத்தலிபின் குடும்பத்தார் ஆகியோருக்கு அளிக்கப்பட வேண்டும். ஒரு பங்கு அநாதைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்காக வழங்கப்பட வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டிய பத்ருடைய நாளில் நம்முடைய அடியார் முஹம்மதுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் மேற்கூறியவாறே பங்கிடுங்கள். பத்ருடைய தினத்தில் உங்கள் எதிரிகளுக்கு எதிராக அவன் உங்களுக்கு உதவி செய்தான். உங்களுக்கு உதவி செய்த அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.