Muslim99Muslim99
← Tafsir library

8. Al-Anfaal

The Spoils of War · Medinan · 75 ayahs

سُورَةُ الأَنفَالِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 21–30 of 75

21

وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ قَالُوا۟ سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ

(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, "நாங்கள் செவியுற்றோம்" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்களைப் போன்று, இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால், கேட்பவற்றின் மூலம் அறிவுரை பெறுவதற்காக, அவற்றைச் சிந்தித்து படிப்பினை பெறும் விதத்தில் கேட்காமல், “எங்களிடம் ஓதிக்காட்டப்படும் குர்ஆனை நமது செவிகளினால் செவியேற்றுக் கொண்டோம்” என்று கூறுகிறார்கள்.

Al-Anfaal 8:21Listen in Qur'an →
22

۞ إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلْبُكْمُ ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.

பூமியின் மீது ஊர்ந்து செல்லும் படைப்புகளில் அல்லாஹ்விடத்தில் மிகவும் கெட்டது சத்தியத்தை செவியேற்று ஏற்றுக்கொள்ள முடியாத செவிடர்களும் அதனை வெளிப்படுத்த முடியாத ஊமையர்களும் ஆவர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தடுத்துள்ளவற்றையும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.

Al-Anfaal 8:22Listen in Qur'an →
23

وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًۭا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ

அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.

இந்த நிராகரிக்கும் இணைவைப்பாளர்களிடம் ஏதேனும் நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால் பயன் பெறும் விதத்தில் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான். ஆதாரங்களையும் சான்றுகளையும் விளங்கியிருப்பார்கள். ஆயினும் அவர்களிடம் நன்மை இல்லை என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டான். -ஒருவேளை- அல்லாஹ் அவர்களை செவியேற்கச் செய்திருந்தாலும் பிடிவாதத்தினால் ஈமானைப் புறக்கணித்திருப்பார்கள்.

Al-Anfaal 8:23Listen in Qur'an →
24

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களின் உண்மையான வாழ்வுள்ள சத்தியத்தின் பக்கம் உங்களை அழைத்தால், அவ்விருவரும் கட்டளையிட்டுள்ளவைகளுக்குக் கட்டுப்பட்டு தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவர்களுக்குப் பதிலளியுங்கள். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்புங்கள். சத்தியத்தை மறுத்து சத்தியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் சத்தியத்திற்கு அடிபணிவதற்கும் மத்தியில் குறுக்கிடுவதற்கும் அவன் சக்தியுடையவன். எனவே அவன் பக்கம் விரைந்து செல்லுங்கள். மறுமை நாளில் உங்கள் அனைவரையும் அவன் ஒன்றுதிரட்டுவான், நீங்கள் இவ்வுலகில் செய்த செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக நம்புங்கள்.

Al-Anfaal 8:24Listen in Qur'an →
25

وَٱتَّقُوا۟ فِتْنَةًۭ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنكُمْ خَآصَّةًۭ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையாளர்களே!- வேதனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களில் பாவிகளை மட்டும் தாக்காது. அநியாயம் மிகைத்து அது தடுக்கப்படவில்லையெனில் மற்றவர்களையும் தாக்கும். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். பாவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

Al-Anfaal 8:25Listen in Qur'an →
26

وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌۭ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

"நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்காளாக!"

நம்பிக்கையாளர்களே!- நீங்கள் மக்காவில் குறைவான எண்ணிக்கையினராக, மக்காவாசிகள் உங்களை பலவீனர்களாகக் கருதி அடக்குமுறைக்குட்படுத்தி உங்கள் எதிரிகள் திடீரென உங்களைத் தாக்கலாம் என நீங்கள் அஞ்சுபவர்களாக இருந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் அடைக்கலம் அளித்தான். பத்ருப் போர் போன்ற போர்களில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்து உங்களைப் பலப்படுத்தினான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவற்றில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய போர்ச் செல்வங்களும் அடங்கும். அல்லாஹ் அருட்கொடைகளை உங்களுக்கு இன்னுமின்னும் அதிகரிப்பதற்காக அவைகளுக்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தி அவற்றுக்கு நன்றி கெட்டத்தனமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே மேற்கூறியவற்றை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினான். நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டால் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளைப் பறித்து உங்களை வேதனையில் ஆழ்த்திடுவான்.

Al-Anfaal 8:26Listen in Qur'an →
27

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَخُونُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓا۟ أَمَٰنَٰتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள் நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகாமல் அவனுக்கும் தூதருக்கும் துரோகமிழைத்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது மோசடி என்பதை அறிந்து கொண்டே உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட கடன்கள் மற்றும் ஏனையவற்றில் மோசடி செய்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்களும் மோசடிக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்.

Al-Anfaal 8:27Listen in Qur'an →
28

وَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَٰدُكُمْ فِتْنَةٌۭ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ

"நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையாளர்களே!- உங்களுடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோதனையே என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவைகள் மறுமைக்காக செயல்படுவதை விட்டும் உங்களைத் தடுக்கும். மோசடி செய்வதற்கும் உங்களைத் தூண்டும். அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய செல்வங்களையும் பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக மோசடி செய்து இந்தக் கூலியை இழந்துவிடாதீர்கள்.

Al-Anfaal 8:28Listen in Qur'an →
29

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَتَّقُوا۟ ٱللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًۭا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்சினால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதை அவன் உங்களுக்கு வழங்குவான். எனவே எது சத்தியம் எது அசத்தியம் என உங்களுக்கு குழப்பம் ஏற்படாது. நீங்கள் செய்த தீய செயல்களை அவன் போக்கிவிடுவான். உங்களின் பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மகத்தான அருளாளனாவான். அவன் தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்காக தயார் படுத்திவைத்துள்ள சுவனங்களும் அவனுடைய அருளில் உள்ளவைதான்.

Al-Anfaal 8:29Listen in Qur'an →
30

وَإِذْ يَمْكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَٰكِرِينَ

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன்.

தூதரே!- உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும் அல்லது நாடுகடத்த வேண்டும் என்பதற்காக இணைவைப்பாளர்கள் இரகசியமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்கின்றனர். அவர்களது சூழ்ச்சியை அல்லாஹ் அவர்கள் மீதே திருப்பி விட்டு அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ்வே மிகச் சிறந்த சூழ்ச்சியாளனாவான்.

Al-Anfaal 8:30Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.