Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 71–80 of 165

71

قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَٰبٌۭ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ

(நபியே!) நீர் கூறும்; "நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டியபின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் "எங்கள் இடம் வந்து விடு" என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்ததால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்." இன்னும் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்."

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “எங்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க இயலாத இந்த சிலைகளையா நாங்கள் வணங்க வேண்டும்? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு ஈமானை நாங்கள் இழந்து, ஷைத்தான்களால் வழிகெடுக்கப்பட்டவன் போல் ஆகலாமா? ஷைத்தான் அவனை செய்வதறியாது தடுமாறித் திரியுமாறு விட்டுவிட்டான். அதே நேரத்தில் அவனை நேரான வழியின் பக்கம் அழைக்கக்கூடிய தோழர்கள் இருந்தும் அவன் அந்த தோழர்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும். நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுமாறு அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன்.”

Al-An'aam 6:71Listen in Qur'an →
72

وَأَنْ أَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُ ۚ وَهُوَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

நாங்கள் தொழுகையை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனையே அஞ்ச வேண்டும் என்றும் அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவனிடமே மறுமைநாளில் அடியார்கள் அனைவரும் - அவர்களின் செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காக - ஒன்றுதிரட்டப்படுவார்கள்.

Al-An'aam 6:72Listen in Qur'an →
73

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ ٱلْحَقُّ ۚ وَلَهُ ٱلْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ ۚ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ

அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் "ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

அவன்தான் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டு படைத்துள்ளான். அவன் ஏதேனும் ஒன்றைப் பார்த்து ஆகிவிடு என்று கூறும் நாளில் அது ஆகிவிடும். அவன் மறுமைநாளில், ‘எழுந்திருங்கள்’ என்று கூறுவான். அவர்கள் எழுந்திருப்பார்கள். அவனது சொல் நிச்சயமாக நிறைவேறியே தீரும் உண்மையான சொல்லாகும். இஸ்ராஃபீல் இரண்டாது சூர் ஊதும் மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் நன்கறிந்தவன். தன் படைப்பில், நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன், எந்த ஒன்றும் அவனை விட்டு மறையாது. மறைவானவையும் அவனிடத்தில் வெளிப்படையானவை போன்றவையே.

Al-An'aam 6:73Listen in Qur'an →
74

۞ وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا ءَالِهَةً ۖ إِنِّىٓ أَرَىٰكَ وَقَوْمَكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ

இப்றாஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப்பாரும்.

தூதரே! இப்ராஹீம் இணைவபை்பாளரான தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “என் அன்புத் தந்தையே! நீங்கள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளையா கடவுள்களாக ஆக்கிக் கொண்டீர்கள்? அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதனால், உங்களையும், சிலைகளை வணங்கும் உங்கள் சமூகத்தையும் தெளிவான வழிகேட்டிலும், சத்தியப் பாதையை விட்டும் தடுமாற்றத்திலும் நான் காண்கிறேன். அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன். அவனைத் தவிர அனைத்தும் பொய்யாக வணங்கப்படுபவையே.

Al-An'aam 6:74Listen in Qur'an →
75

وَكَذَٰلِكَ نُرِىٓ إِبْرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلِيَكُونَ مِنَ ٱلْمُوقِنِينَ

அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்றாஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

அவரது தந்தை மற்றும் சமூகத்தின் வழிகேட்டை அவருக்குக் காட்டியது போல அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிவிக்கக்கூடிய வானங்கள் மற்றும் பூமியின் விசாலமான ஆட்சியதிகாரத்தை அவருக்குக் காட்டினோம். அல்லாஹ் ஒருவனே, அவன் மாத்திரமே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிந்து, அவனுக்கு யாதொரு இணையுமில்லை, அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்பியவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவற்றையெல்லாம் அவருக்குக் காட்டினோம்.

Al-An'aam 6:75Listen in Qur'an →
76

فَلَمَّا جَنَّ عَلَيْهِ ٱلَّيْلُ رَءَا كَوْكَبًۭا ۖ قَالَ هَٰذَا رَبِّى ۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلْءَافِلِينَ

ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார்.

இரவின் இருள் தோன்றி, அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்ட போது, ‘இது என் இறைவன்’ என்றார். நட்சத்திரம் மறைந்த போது, ‘நான் மறையக்கூடியதை விரும்ப மாட்டேன்.உண்மையான இறைவன் மறைய மாட்டான்’ என்றார்.

Al-An'aam 6:76Listen in Qur'an →
77

فَلَمَّا رَءَا ٱلْقَمَرَ بَازِغًۭا قَالَ هَٰذَا رَبِّى ۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِى رَبِّى لَأَكُونَنَّ مِنَ ٱلْقَوْمِ ٱلضَّآلِّينَ

பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.

அவர் சந்திரன் உதிப்பதைக் கண்டபோது தன் சமூகத்தினரிடம் ‘இது என் இறைவன்’ என்றார். அதுவும் மறைந்த போது, ‘என் இறைவன், அவன் ஒருவன் அவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதன் பக்கம் எனக்கு வழிகாட்டவில்லையென்றால் அவனது மார்க்கத்தை விட்டும் தூரமாகியவர்களில் ஒருவனாகிவிடுவேன்’ என்றார்.

Al-An'aam 6:77Listen in Qur'an →
78

فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةًۭ قَالَ هَٰذَا رَبِّى هَٰذَآ أَكْبَرُ ۖ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تُشْرِكُونَ

பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது "இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது" என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்" என்று கூறினார்.

அவர் சூரியன் உதிப்பதைக் கண்ட போது, ‘இதுதான் என் இறைவன், இது நட்சத்திரத்தையும் சந்திரனையும் விட பெரியது’ என்றார். அதுவும் மறைந்த போது, “என் சமூகமே, நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியவைகளை விட்டும் நான் நீங்கியவனாவேன்” என்றார்.

Al-An'aam 6:78Listen in Qur'an →
79

إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ حَنِيفًۭا ۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ

"வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (என்று கூறினார்).

இணைவைப்பை விட்டும் ஒதுங்கி தூய்மையான ஏகத்துவத்தின் பக்கம் சார்ந்தவனாக, வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கு நான் என் அடிபணிதலை உரித்தாக்கிவிட்டேன். அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இணைவைப்பாளர்களில் நான் ஒருவன் அல்ல.

Al-An'aam 6:79Listen in Qur'an →
80

وَحَآجَّهُۥ قَوْمُهُۥ ۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّى فِى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنِ ۚ وَلَآ أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّى شَيْـًۭٔا ۗ وَسِعَ رَبِّى كُلَّ شَىْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ

அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று கூறினார்.

இணைவைக்கும் அவருடைய சமூகத்தினர் அல்லாஹ் ஒருவனே என்ற விஷயத்தில் அவரிடம் வாதம் செய்தார்கள். தங்கள் சிலைகளைக் காட்டி பயமுறுத்தினார்கள். அவர் கூறினார், “அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்ற விஷயத்திலா நீங்கள் என்னிடம் வாதம் புரிகிறீர்கள்? அதன் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டிவிட்டான். நான் உங்களின் சிலைகளைக் கண்டு அஞ்சமாட்டேன். ஏனெனில் அவை பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெறமாட்டாது. ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் நாடியது நிறைவேறியே தீரும். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்துள்ளதுடன் வானத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஒன்றும் அவனை விட்டு மறைவாக இல்லை. என் சமூகமே, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, அவனை நிராகரிக்கும் நீங்கள் அல்லாஹ் ஒருவன் மீது மட்டுமே நம்பிக்கைகொண்டு அறிவுரை பெற மாட்டீர்களா?”

Al-An'aam 6:80Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.