Muslim99Muslim99
← Tafsir library

6. Al-An'aam

The Cattle · Meccan · 165 ayahs

سُورَةُ الأَنۡعَامِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 165

61

وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

அல்லாஹ்தான் தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவன்; அவர்களை அடிபணிய வைப்பவன். அனைத்து விதத்திலும் எல்லாவற்றையும் மிகைத்தவன். அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. தனது மகத்துவத்திற்குத் தக்கவாறு தனது அடியார்களின் மேல் அவன் இருக்கிறான். மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது சங்கையான வானவர்களை அனுப்புகிறான். உயிரைக் கைப்பற்றும் வானவரும் அவரது உதவியாளர்களும் உங்களின் உயிரைக் கைப்பற்றி உங்களின் தவணை முடியும் வரை, அவர்கள் உங்களின் செயல்களைக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் செய்வதில்லை.

Al-An'aam 6:61Listen in Qur'an →
62

ثُمَّ رُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۚ أَلَا لَهُ ٱلْحُكْمُ وَهُوَ أَسْرَعُ ٱلْحَٰسِبِينَ

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.

பின்னர் யாருடைய உயிரெல்லாம் கைப்பற்றப்பட்டதோ அவர்கள் தங்களின் உண்மையான இறைவனான அல்லாஹ்விடம் தங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் விஷயத்தில் செல்லுபடியாகும் நீதமான தீர்ப்பு அவனிடமே உள்ளது. உங்களையும் உங்களது செயல்களையும் கணிப்பீடு செய்வோரில் அவனே மிக விரைவானவன்.

Al-An'aam 6:62Listen in Qur'an →
63

قُلْ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ تَدْعُونَهُۥ تَضَرُّعًۭا وَخُفْيَةًۭ لَّئِنْ أَنجَىٰنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ

(நபியே!) நீர் கூறும்; நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) "எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?"

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நீரிலும் நிலத்திலுமுள்ள இருள்களில் உங்களுக்கு நேரும் அழிவுகளிலிருந்து உங்களைக் காப்பவன் யார்? அப்போது, “எங்கள் இறைவா! இந்த அழிவிலிருந்து எங்களை நீ காப்பாற்றிவிட்டால் உன்னைத் தவிர யாரையும் வணங்காமல் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களாகி விடுவோம்” என வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பணிவுடன் அவனையே நீங்கள் அழைக்கின்றீர்கள்.

Al-An'aam 6:63Listen in Qur'an →
64

قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنْهَا وَمِن كُلِّ كَرْبٍۢ ثُمَّ أَنتُمْ تُشْرِكُونَ

"இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே" என்று கூறுவீராக.

தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். எல்லா துன்பங்களிலிருந்தும் அவனே உங்களைப் பாதுகாக்கிறான். இதன் பின்னரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குகிறீர்கள். நீங்கள் செய்வதை விட வேறு அநியாயம் என்ன இருக்க முடியும்?.”

Al-An'aam 6:64Listen in Qur'an →
65

قُلْ هُوَ ٱلْقَادِرُ عَلَىٰٓ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًۭا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًۭا وَيُذِيقَ بَعْضَكُم بَأْسَ بَعْضٍ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْءَايَٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு மேலிருந்து - கல், மின்னல், வெள்ளம் போன்ற - வேதனையை அனுப்பவோ உங்களுக்குக் கீழிருந்து - பூகம்பம், பூமியில் புதையச் செய்தல் போன்ற - வேதனையை ஏற்படுத்தவோ அல்லது ஒவ்வொருவரும் தனது மனஇச்சையைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அளவு உள்ளங்களிடையே பிரிவினை ஏற்படுத்தவோ அல்லாஹ் சக்தியுடையவன். தூதரே! நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்றும் தங்களிடமுள்ளதை அசத்தியம் என்றும் அவர்கள் அறிந்துகொள்வதற்காக, நாம் எவ்வாறு பல்வேறு வகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைப் பாரும்.

Al-An'aam 6:65Listen in Qur'an →
66

وَكَذَّبَ بِهِۦ قَوْمُكَ وَهُوَ ٱلْحَقُّ ۚ قُل لَّسْتُ عَلَيْكُم بِوَكِيلٍۢ

(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, "நான் உங்கள் மீது பொருப்பாளன் அல்ல" என்று (நபியே!) நீர் கூறிவிடும்.

இந்த குர்ஆன், அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான் என்பதில் எவ்வித சந்தேகமுமற்ற, உண்மையாக இருந்த போதும் உம் சமூகம் இதனை பொய்யெனக் கூறியது. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டவன் அல்ல. நான் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்பவன் மட்டுமே.

Al-An'aam 6:66Listen in Qur'an →
67

لِّكُلِّ نَبَإٍۢ مُّسْتَقَرٌّۭ ۚ وَسَوْفَ تَعْلَمُونَ

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஒவ்வொரு செய்திக்கும் தங்கும் நேரமும் முடிவும் இருக்கின்றது. அதில் உங்களின் திரும்புமிடம், இறுதி முடிவு குறித்த செய்தியும் உள்ளது. மறுமை நாளில் நீங்கள் மீண்டும் எழுப்பப்படும் போது இதனை அறிந்துகொள்வீர்கள்.

Al-An'aam 6:67Listen in Qur'an →
68

وَإِذَا رَأَيْتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِىٓ ءَايَٰتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيْطَٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ ٱلذِّكْرَىٰ مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

தூதரே! அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்யும் இணைவைப்பாளர்களை நீர் கண்டால் அவர்கள் அவற்றை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருங்கள். ஷைத்தான் உம்மை மறக்கடிக்கச் செய்து நீர் அவர்களுடன் அமர்ந்துவிட்டால் பின்னர் நினைவுகூர்ந்தால் அவர்களின் அவையை விட்டு விடுவீராக. வரம்புமீறும் அவர்களுடன் நீர் அமராதீர்.

Al-An'aam 6:68Listen in Qur'an →
69

وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍۢ وَلَٰكِن ذِكْرَىٰ لَعَلَّهُمْ يَتَّقُونَ

(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொருப்பாகும்.

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்கள் மீது இந்த அநியாயக்காரர்களைக் குறித்து எந்த கேள்விக் கணக்கும் இல்லை. இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும்பொருட்டு இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீமைகளை விட்டும் தடுப்பதே அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதுள்ள கடமையாகும்.

Al-An'aam 6:69Listen in Qur'an →
70

وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَعِبًۭا وَلَهْوًۭا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ وَذَكِّرْ بِهِۦٓ أَن تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِىٌّۭ وَلَا شَفِيعٌۭ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍۢ لَّا يُؤْخَذْ مِنْهَآ ۗ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أُبْسِلُوا۟ بِمَا كَسَبُوا۟ ۖ لَهُمْ شَرَابٌۭ مِّنْ حَمِيمٍۢ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

தூதரே! தங்களின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்து வீண் விளையாட்டாக ஆக்கிக் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை விட்டு விடுவீராக. இவ்வுலகில் உள்ள அற்ப இன்பங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டது. தூதரே! எவரும் தாம் செய்த தீமைகளின் காரணமாக அழிந்து விடாமல் இருக்க மக்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அறிவுரை வழங்குவீராக. மறுமை நாளில் அல்லாஹ்வைத் தவிர உதவி செய்யும் உதவியாளனோ அவனுடைய வேதனையிலிருந்து தடுக்கக்கூடிய பரிந்துரையாளனோ யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விடுபடுவதற்கு ஈடாக எதையேனும் வழங்கினால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. மறுமை நாளில், தாங்கள் செய்த பாவங்களின் காரணமாக தன்னை அழிவில் போட்டுக் கொண்டவர்களுக்கு அவர்களது நிராகரிப்பின் காரணமாக கொதிக்கும் நீரும் வேதனைமிக்க தண்டனையும் உண்டு.

Al-An'aam 6:70Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.