Muslim99Muslim99
← Tafsir library

3. Aal-i-Imraan

The Family of Imraan · Medinan · 200 ayahs

سُورَةُ آلِ عِمۡرَانَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 151–160 of 200

151

سَنُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ بِمَآ أَشْرَكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًۭا ۖ وَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۚ وَبِئْسَ مَثْوَى ٱلظَّٰلِمِينَ

விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் உங்களுடன் நிலைத்து நின்று போர்புரியாமல் இருக்கும் பொருட்டு அவர்களது உள்ளங்களில் நாம் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவோம். ஏனெனில் அவர்கள் தமது மனோஇச்சையின் படி எவ்வித ஆதாரமும் அற்ற தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். மறுமையில் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடமான நரகம் கெட்ட தங்குமிடமாகும்.

Aal-i-Imraan 3:151Listen in Qur'an →
152

وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْءَاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ وَلَقَدْ عَفَا عَنكُمْ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.

அல்லாஹ் உஹதுப்போரில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவிசெய்து, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினான். அல்லாஹ்வின் அனுமதிகொண்டு அவர்களை நீங்கள் கடுமையாக வெட்டிச்சாய்த்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர் தூதர் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு உறுதியாக நில்லாமல் உங்களது இடங்களில் தொடர்ந்திருப்பதா அல்லது அதனை விட்டுவிட்டு போர்ச்செல்வங்களை திரட்டுவதா என உங்களுக்கு மத்தியில் கருத்துவேறுபட்டு எச்சந்தர்ப்பத்திலும் குறித்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்ற தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் விரும்பும் உதவியை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய பின்னரும் அது நிகழ்ந்தது. உங்களில் இவ்வுலகச் செல்வங்களை விரும்புவர்கள்தாம் தங்களின் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்கள். உங்களில் மறுமையை விரும்புபவர்கள் தூதரின் கட்டளைப்படி தங்களின் இடத்திலேயே உறுதியாக நின்றார்கள். பின்னர் அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு, அவர்களை விட்டும் உங்களைத் திருப்பி அவர்களை உங்கள் மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். உறுதியுடன் பொறுமையாக இருந்து துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாளர்கள் யார், நிலைகுலையும் பலவீனர்கள் யார் என்பது தெரிவதற்காக இவ்வாறு செய்தான். தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் மீது பேரருள் புரியக்கூடியவன். அவர்களுக்கு ஈமானின் பக்கம் வழிகாட்டியுள்ளான். அவர்களின் தவறுகளை மன்னித்தும்விட்டான். அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக அவர்களுக்குக் கூலியும் வழங்கிவிட்டான்.

Aal-i-Imraan 3:152Listen in Qur'an →
153

۞ إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُۥنَ عَلَىٰٓ أَحَدٍۢ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ فِىٓ أُخْرَىٰكُمْ فَأَثَٰبَكُمْ غَمًّۢا بِغَمٍّۢ لِّكَيْلَا تَحْزَنُوا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَآ أَصَٰبَكُمْ ۗ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ

(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

நம்பிக்கையாளர்களே! உஹதுப் போரில் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் அடைந்த தோல்வியால் ஒருவரையொருவர் திரும்பிக்கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்குப் பின்னாலிருந்து, இணைவைப்பாளர்களுக்கு முன்னாலிருந்து, “அல்லாஹ்வின் அடியார்களே, என்னிடம் வாருங்கள், அல்லாஹ்வின் அடியார்களே என்னிடம் வாருங்கள்” என்று தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தார். இந்த துன்பத்திற்கும் நெருக்கடிக்கும் மேலும் அல்லாஹ் துன்பத்தையும் நெருக்கடியையும் தொடரச் செய்தான். முதலில் இறைஉதவியையும் போர்ச் செல்வங்களையும் இழந்தீர்கள். பின்னர் நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி உங்களிடையே பரவியது. இந்த துன்பம் ஏனெனில் தூதர் கொல்லப்படவில்லை என்பதை அறிந்தபிறகு இழந்த வெற்றிக்காகவும் போர்ச் செல்வங்களுக்காகவும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காகவும் உயிர்ச் சேதங்களுக்காகவும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான். தூதர் கொல்லப்படவில்லை என்ற செய்தியை அறிந்தபிறகு எல்லா துன்பங்களும் உங்களுக்கு இலகுவாகிவிட்டன. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களோ செய்யும் உறுப்புக்களால் செய்யும் செயல்களோ எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

Aal-i-Imraan 3:153Listen in Qur'an →
154

ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّنۢ بَعْدِ ٱلْغَمِّ أَمَنَةًۭ نُّعَاسًۭا يَغْشَىٰ طَآئِفَةًۭ مِّنكُمْ ۖ وَطَآئِفَةٌۭ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ ظَنَّ ٱلْجَٰهِلِيَّةِ ۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلْأَمْرِ مِن شَىْءٍۢ ۗ قُلْ إِنَّ ٱلْأَمْرَ كُلَّهُۥ لِلَّهِ ۗ يُخْفُونَ فِىٓ أَنفُسِهِم مَّا لَا يُبْدُونَ لَكَ ۖ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ ٱلْأَمْرِ شَىْءٌۭ مَّا قُتِلْنَا هَٰهُنَا ۗ قُل لَّوْ كُنتُمْ فِى بُيُوتِكُمْ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ ٱلْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ وَلِيَبْتَلِىَ ٱللَّهُ مَا فِى صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِى قُلُوبِكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; "இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!" என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.

இந்த வேதனைக்கும் நெருக்கடிக்கும் பிறகு அல்லாஹ் உங்கள்மீது நிம்மதியையும் நம்பிக்கையையும் இறக்கினான். அதனால் உங்களில் அவனுடைய வாக்குறுதியை உறுதியாக நம்பியவர்களை -அவர்களது உள்ளங்களில் உள்ள அமைதியினால்- சிறு தூக்கம் தழுவிக் கொண்டது. மற்றொரு பிரிவினருக்கு சிறு தூக்கமோ அமைதியோ ஏற்படவில்லை. அவர்கள்தாம் தங்களின் பாதுகாப்பு பற்றி மட்டுமே கவலைகொண்ட நயவஞ்சகர்கள். அவர்கள் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தார்கள். அல்லாஹ்வை மதிப்பிட வேண்டிய முறைப்படி மதிப்பிடாத இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள்போல அவன் தன் தூதருக்கோ அடியார்களுக்கோ உதவிபுரிய மாட்டான் என்று கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறியாத இந்த நயவஞ்சகர்கள், “போருக்குப் புறப்பட்டபோது எங்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருந்திருந்தால் நாங்கள் வெளியேறியிருக்க மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதரே! இவர்களிடம் நீர் கூறுவீராக, “அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவனே தான் நாடியதைக் கட்டளையிடுகிறான், தான் நாடியதை விதிக்கிறான். அவன்தான் நீங்கள் போருக்குப் புறப்பட வேண்டும் என்று விதித்தவனும்.” இந்த நயவஞ்சகர்கள் தங்கள் உள்ளங்களில் உம்மிடம் வெளிப்படுத்தாத சந்தேகத்தையும் கெட்ட எண்ணத்தையும் மறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: “போருக்குப் புறப்படும் விஷயத்தில் எங்களின் ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் நாங்கள் இந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “கொலைக்களத்தினை விட்டு தூரமாக உங்களின் வீடுகளில் நீங்கள் தங்கியிருந்தாலும் உங்களில் யாருக்கு அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டானோ அவர் தான் கொலைசெய்யப்படும் இடத்தினை நோக்கி புறப்பட்டே இருப்பார். உங்களின் உள்ளங்களிலுள்ள எண்ணங்களையும் நோக்கங்களையும் சோதிப்பதற்காகவும் அதிலுள்ள ஈமானையும் நயவஞ்சகத்தையும் பிரித்துக்காட்டுவதற்காவும் அல்லாஹ் இவ்வாறு விதித்துள்ளான். தன் அடியார்களின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Aal-i-Imraan 3:154Listen in Qur'an →
155

إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ ٱلشَّيْطَٰنُ بِبَعْضِ مَا كَسَبُوا۟ ۖ وَلَقَدْ عَفَا ٱللَّهُ عَنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌۭ

இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.

முஹம்மதின் தோழர்களே! முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் மோதிக் கொண்ட உஹதுப்போரில் உங்களில் தோல்வியடைந்தவர்களை ஷைத்தான்தான் -அவர்கள் சம்பாதித்த சில பாவங்களின் காரணமாக சறுகச் செய்துவிட்டான். அல்லாஹ் தன் அருளாலும் கருணையாலும் அவர்களைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவன் உடனுக்குடன் தண்டித்துவிடாத சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான்.

Aal-i-Imraan 3:155Listen in Qur'an →
156

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ إِذَا ضَرَبُوا۟ فِى ٱلْأَرْضِ أَوْ كَانُوا۟ غُزًّۭى لَّوْ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِيَجْعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسْرَةًۭ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ يُحْىِۦ وَيُمِيتُ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ

முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்;. பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்;. மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்;. அவனே மரிக்கச் செய்கிறான்;. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரிப்பாளர்களான நயவஞ்சகர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் தமது உறவினர்களிடம், வாழ்வாதாரம் தேடி அல்லது போர்செய்வதற்காக பயணம் செய்து கொல்லப்பட்ட அல்லது இறந்தவர்களைக் குறித்து, “அவர்கள் புறப்படாமல் நம்மிடத்தில் இருந்திருந்தால், போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கவோ இறந்திருக்கவோ மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களது உள்ளங்களில் கைசேதமும் கவலையும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். தனது நாட்டத்தின் பிரகாரம் வாழ்வையும் மரணத்தையும் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. அவன் தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவர்கள் வீட்டில் அமர்ந்திருப்பதால் விதியைத் தடுக்கவும் முடியாது. புறப்படுவதால் விரைவாக்கவும் முடியாது. உங்களின் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Aal-i-Imraan 3:156Listen in Qur'an →
157

وَلَئِن قُتِلْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ இறந்தாலோ அவன் உங்களுக்கு பெரும் மன்னிப்பையும் தன் புறத்திலிருந்து அருளையும் வழங்குவான். அது இவ்வுலகம், இந்த உலக மக்கள் சேர்த்து வைக்கும் அனைத்தையும்விடச் சிறந்ததாகும்.

Aal-i-Imraan 3:157Listen in Qur'an →
158

وَلَئِن مُّتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى ٱللَّهِ تُحْشَرُونَ

நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.

நீங்கள் எப்படி மரணித்தாலும் அல்லது அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் அவன் பக்கமே நீங்கள் அனைவரும் திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.

Aal-i-Imraan 3:158Listen in Qur'an →
159

فَبِمَا رَحْمَةٍۢ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

தூதரே! அல்லாஹ்வின் பெரும் அருளினால்தான் உம் தோழர்களுடன் மென்மையான முறையில் நடந்துகொள்கிறீர். சொல்லிலும் செயலிலும் நீர் கடுமையானவராக, கடினமனம் கொண்டவராக இருந்திருந்தால் உம்மை விட்டு அவர்கள் விலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் உமக்குச் செய்த குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. ஆலோசனை தேவைப்படும் விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக. ஆலோசனைக்குப் பின் ஏதேனும் விஷயத்தில் நீர் உறுதிகொண்டுவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அதனைச் செயல்படுத்துவீராக. தன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அவர்களைப் பலப்படுத்துகிறான்.

Aal-i-Imraan 3:159Listen in Qur'an →
160

إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.

அல்லாஹ் தனது உதவியினால் உங்களைப் பலப்படுத்தினால் உலகிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் யாராலும் உங்களை மிகைக்க முடியாது. அவன் உங்களுக்கு உதவாது கைவிட்டுவிட்டால் அதற்குப் பிறகு யாராலும் உங்களுக்கு உதவிசெய்ய முடியாது. உதவி அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். வேறுயாரையும் முழுமையாக நம்பியிருக்கக் கூடாது.

Aal-i-Imraan 3:160Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.