Muslim99Muslim99
← Tafsir library

14. Ibrahim

Abraham · Meccan · 52 ayahs

سُورَةُ إِبۡرَاهِيمَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 52

11

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்" என்று கூறினார்கள்.

அவர்களின் தூதர் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எல்லா விஷயங்களிலும் நாங்கள் உங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு பிரத்யேகமான அருளை வழங்கி, அவர்களை மக்களுக்குத் தூதர்களாகத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் நாட்டமின்றி நீங்கள் வேண்டும் ஆதாரங்களை எங்களால் கொண்டுவர முடியாது. அதற்கு எமக்கு ஆற்றலும் இல்லை. மாறாக அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அவனை நம்பிக்கை கொண்டோர் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

12

وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ

"அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சமயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)

நாங்கள் அல்லாஹ்வை சார்ந்திருப்பதற்கு எதுதான் நமக்குத் தடையாக அமையமுடியும்? அவன்தானே எங்களுக்கு சரியான, தெளிவான பாதையின்பால் எங்களுக்கு வழிகாட்டினான். மறுத்து, பரிகாசம் செய்து நீங்கள் எங்களுக்குத் தரும் தொல்லைகளை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

13

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّٰلِمِينَ

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, "நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள், அப்போது "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.

தங்களின் தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களுடன் விவாதிக்க இயலாமல் அவர்களிடம் கூறினார்கள்: “நாங்கள் உங்களை எங்களின் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம் அல்லது நீங்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு விட்டு எங்கள் மார்க்கத்தின்பால் திரும்பிவிட வேண்டும்.” அல்லாஹ் தூதர்களை உறுதிப்படுத்தியவாறு வஹி அறிவித்தான்: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்த அநியாயக்காரர்களை நிச்சயம் நாம் அழித்தே தீருவோம்.”

14

وَلَنُسْكِنَنَّكُمُ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِى وَخَافَ وَعِيدِ

"நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்" (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).

தூதர்களே!, உங்களைப் பின்பற்றியோரே- அவர்களை அழித்த பிறகு பூமியில் நாம் உங்களை வசிக்கச் செய்வோம். மறுப்பவர்களான நிராகரிப்பாளர்களை அழித்து, அதன் பிறகு தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் அந்தப் பூமியில் நாம் வசிக்கச் செய்வது, எனது கண்ணியத்தையும் கண்காணிப்பையும் கவனத்தில் கொண்டு, வேதனை ஏற்படும் என்ற எனது எச்சரிக்கையை அஞ்சியவருக்கேயாகும்.

15

وَٱسْتَفْتَحُوا۟ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍۢ

ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.

தூதர்கள் தங்கள் இறைவனிடம் எதிரிகளுக்கு எதிராக தங்களுக்கு உதவி புரியும்படி வேண்டினார்கள். கர்வம் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதம் மிக்க ஒவ்வொருவரும் நஷ்டமடைந்து விட்டார்கள். அது தெளிவாக இருந்தும் அவர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை.

16

مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّآءٍۢ صَدِيدٍۢ

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.

மறுமையில் இந்த கர்வம் கொண்டவர்களுக்கு முன்னால் நரகமே இருக்கின்றது. அது அவர்களுக்காக காத்திருக்கின்றது. அங்கு நரகவாசிகளின் உடல்களிலிருந்து வழியும் சீழ்களிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அது அவர்களின் தாகத்தை தணிக்காது. தாகத்தாலும் இன்னபிற வேதனைகளாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

17

يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍۢ وَمَا هُوَ بِمَيِّتٍۢ ۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌۭ

அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

அதன் கசப்பு, சூடு, துர்நாற்றம் ஆகியவற்றின் காரணமாக தொடராக அதனைப் பருகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களால் அதனை விழுங்க முடியாது. அவர்களை சுற்றி காணப்படும் கடுமையான வேதனையினால், மரணம் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களை வந்தடையும். அவன் ஓய்வு பெறுவதற்கு மரணிக்கவும் மாட்டான். மாறாக உயிரோடு இருந்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு முன்னால் வேறொரு கடுமையான வேதனையும் காத்திருக்கின்றது.

18

مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍۢ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍۢ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلْبَعِيدُ

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.

தர்மம் செய்தல், உபகாரம் செய்தல், பலவீனர்கள் மீது இரக்கம் காட்டுதல் போன்ற நிராகரிப்பாளர்கள் செய்யும் நற்செயல்கள், புயல் வீசும் நாளில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாம்பலைப் போன்றதாகும். அது அதனை தூக்கி வீசி நாலா புறமும் அடையாளம் தெரியாதவாறு சிதறடித்து விட்டது. இது போன்று நிராகரிப்பாளர்களின் செயல்களை நிராகரிப்பு ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டது. மறுமை நாளில் அவர்களுக்கு அவை பலனளிக்காது. ஈமானின் அடிப்படையில் அமையாத அச்செயல்கள் சத்திய பாதையை விட்டும் தூரமான வழிகேடாகும்.

19

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍۢ جَدِيدٍۢ

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.

அல்லாஹ் வானங்களையும் பூமியையையும் ஒரு நோக்கத்துடன் படைத்துள்ளான். அவையிரண்டையும் வீணாகப் படைக்கவில்லை என்பதை நீர் பார்க்கவில்லையா? -மனிதர்களே!- அவன் உங்களை அழித்துவிட்டு, அவனை வணங்கி, வழிபடும் வேறொரு படைப்பை கொண்டு வர அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு, அவனை வணங்கி, வழிபடும் வேறொரு படைப்பை கொண்டு வருவான். இவ்வாறு செய்வது அவனுக்கு இலகுவான காரியமாகும்.

20

وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍۢ

இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினானதுமல்ல.

உங்களை அழிப்பதும், நீங்கள் அல்லாத வேறொரு படைப்பைக் கொண்டு வருவதும் அவனால் முடியாததல்ல. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.