Muslim99Muslim99
← Tafsir library

14. Ibrahim

Abraham · Meccan · 52 ayahs

سُورَةُ إِبۡرَاهِيمَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 52

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

الٓر ۚ كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ لِتُخْرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).

(الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் உதவியைப் பெற்று நீர் மக்களை நிராகரிப்பு, அறியாமை, வழிகேடு ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு, இஸ்லாமிய மார்க்கத்திற்கான வழிகாட்டல் ஆகியவற்றின் பக்கம் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இஸ்லாமிய மார்க்கமே யாவற்றையும் மிகைத்த அல்லாஹ்வின் பாதையாகும். அவனை யாராலும் மிகைக்க முடியாது. எல்லாவற்றிலும் அவன் புகழுக்குரியவன்.

2

ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَوَيْلٌۭ لِّلْكَٰفِرِينَ مِنْ عَذَابٍۢ شَدِيدٍ

அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.

வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனுடைய படைப்பில் எதுவும் அவனுக்கு இணையாக்கப்படக் கூடாது. நிராகரித்தவர்களை கடும் வேதனை வந்தடையும்.

3

ٱلَّذِينَ يَسْتَحِبُّونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍۢ

இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.

நிராகரிப்பாளர்கள் மறுமை, அதன் நிலையான இன்பங்களுக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கை, அதன் அழியக்கூடிய இன்பங்களை விரும்புகிறார்கள். மக்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். அதில் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக அது மோசமானதாகவும் சத்தியத்தை விட்டும் நெறிபிறழ்ந்தும் கோணலாகவும் இருக்க வேண்டும் என நாடுகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் சரியானவை, சத்தியத்தை விட்டும் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

4

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

நாம் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்த தூதை மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் பொருட்டு அவரவர் சமூகம் பேசுகிற மொழியிலேயே அனுப்பினோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பதற்காக நாம் அவர்களை அனுப்பவில்லை. அல்லாஹ் தான் நாடியவர்களை தன் நீதியால் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழி காட்டுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், ஏற்பாட்டில் அவன் ஞானம்மிக்கவன்.

5

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ

நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, "நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக" என்று கட்டளையிட்டோம்; நிச்சமயாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.

நாம் மூஸாவை அனுப்பினோம். அவரது நம்பகத் தன்மையையும், அவர் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை அறிவிக்கும் சான்றுகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினோம். அவருடைய சமூகத்தை நிராகரிப்பு, அறியாமை என்பவற்றிலிருந்து ஈமான், அறிவு ஆகியவற்றின் பக்கம் வெளியேற்றுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்த நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். நிச்சயமாக இந்த நாட்களில், அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும், அவனுடைய மகத்தான வல்லமையையும், நம்பிக்கையாளர்களின் மீது அவனது அருள் புரிதலையும் அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய அத்தாட்சி, அருட்கொடைகளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்தும் பொறுமையாளர்கள்தாம் இந்த நாட்களைக் கொண்டு பயனடைவார்கள்.

6

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ

மூஸா தம் சமூகத்தாரிடம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது" என்று கூறினார்,

தூதரே!- மூஸா தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, தம் சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர் கூறினார்: “ சமூகமே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி, அவர்களின் தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தான். அவர்கள் உங்களை கொடிய வேதனையில் ஆழ்த்தியிருந்தார்கள். பிர்அவ்னின் ஆட்சியைப் பிடித்துக்கொள்ளும் ஒருவன் உங்களிடையே பிறந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் உங்களின் ஆண் மக்களைக் கொலை செய்து கொண்டும் உங்களை இழிவுபடுத்தவும் அவமானப்படுத்தவும் உங்களின் பெண் மக்களை உயிருடன் விட்டுவைத்துக் கொண்டும் இருந்தான். அவர்களின் இந்த செயல்களில் உங்களின் பொறுமைக்கு மாபெரும் சோதனை இருந்தது. நீங்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால் பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி உங்களுக்கு வெகுமதியளித்தான்.

7

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌۭ

("இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

மூஸா அவர்களிடம் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுக்கு உறுதியாக அறிவித்ததை நினைவுகூருங்கள்: “அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றிசெலுத்தினால் அவன் தன் அருட்கொடைகளையும் சிறப்பையும் உங்களுக்கு இன்னும் அதிகமாக வழங்குவான். நீங்கள் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டால் நிச்சயமாக தனது அருள்களை மறுத்து அவற்றுக்கு நன்றி செலுத்தாதோருக்கு அவனுடைய வேதனை கடுமையானது.”

8

وَقَالَ مُوسَىٰٓ إِن تَكْفُرُوٓا۟ أَنتُمْ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا فَإِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ حَمِيدٌ

மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) "நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்" என்றும் கூறினார்.

மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: சமூகமே, “நீங்களும் உங்களுடன் சேர்ந்து பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வை நிராகரித்தாலும் அதனால் நீங்கள்தாம் பாதிக்கப்படுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; தன் உள்ளமையை கொண்டு புகழுக்குரியவன். நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அவனுக்கு எந்த பயனையும் அளித்து விடுவதில்லை; நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்த தீங்கையும் அளித்து விடுவதில்லை.”

9

أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّۢ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍۢ

உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, "நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சமயாக நாங்கள் நிராகரிக்கின்றோம் அன்றிpயும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள்.

நிராகரிப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் நிராகரித்த நூஹின் சமூகம், ஹூத் உடைய சமூகம் ஆத், ஸாலிஹின் சமூகம், ஸமூத் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த சமூகங்கள் அவற்றின் எண்ணிக்கையை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான் - ஆகியவை அழிக்கப்பட்ட செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் தூதர்களின் மீதுள்ள வெறுப்பினால் தமது கரங்களை வாயிலிட்டு விரல்களைக் கடித்துக் கொண்டனர். மேலும் தங்களின் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் கொண்டு வந்ததை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் எங்களை அழைக்கும் விஷயத்தில் நாங்கள் கடும் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”

10

۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِى ٱللَّهِ شَكٌّۭ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۚ قَالُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتُونَا بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ

அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.

அவர்களின் தூதர்கள் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்திருக்கும் நிலையில், அவனை மட்டுமே வணக்கத்தில் ஏகத்துவப்படுத்த வேண்டும் என்பதிலும் சந்தேகமா? உங்களின் முந்தைய பாவங்களை மன்னிப்பதற்காகவும் உங்களது உலக வாழ்வில் குறிக்கப்பட்ட உங்கள் தவணைகளைப் பூர்த்தி செய்யும் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும், தன்னை நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் அழைக்கின்றான்.” அவர்களின் சமூகத்தினர் அவர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களை திசைதிருப்பப் பார்க்கிறீர்கள். “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து எங்களின் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள்” என்ற உங்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை எங்களிடம் கொண்டு வாருங்கள்.”

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.