Muslim99Muslim99
← Tafsir library

12. Yusuf

Joseph · Meccan · 111 ayahs

سُورَةُ يُوسُفَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 71–80 of 111

71

قَالُوا۟ وَأَقْبَلُوا۟ عَلَيْهِم مَّاذَا تَفْقِدُونَ

(அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, "நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்" எனக் கேட்டார்கள்.

யூஸுஃபின் சகோதரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்த அறிவிப்பாளரையும் அவருடன் இருந்தவர்களையும் முன்னோக்கிக் கேட்டார்கள்: “எம்மைத் திருடியதாகச் சந்தேகிப்பதற்கு உங்களிடமிருந்து என்ன தொலைந்தது?”

72

قَالُوا۟ نَفْقِدُ صُوَاعَ ٱلْمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمْلُ بَعِيرٍۢ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٌۭ

"நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளரும் அவருடன் இருந்தவர்களும் யூஸுஃபின் சகோதரர்களிடம் கூறினார்கள்: “எங்களிடமிருந்து அரசரின் அளவுக் குவளை தொலைந்து விட்டது. பரிசோதனை செய்வதற்கு முன்னரே அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்குத் தானியம் பரிசாக வழங்கப்படும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

73

قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ عَلِمْتُم مَّا جِئْنَا لِنُفْسِدَ فِى ٱلْأَرْضِ وَمَا كُنَّا سَٰرِقِينَ

(அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்" என்றார்கள்.

யூஸுஃபின் சகோதரர்கள் அவர்களிடம் கூறினார்கள்: “எங்களின் நிலைகளை நீங்கள் பார்த்தது போன்று எமது நேர்மையையும் தூய்மையையும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். நாங்கள் குழப்பம் விளைவிப்பதற்காக எகிப்து நாட்டிற்கு வரவில்லை. நாங்கள் எமது வாழ்வில் திருடர்களாகவும் இருந்ததில்லை.”

74

قَالُوا۟ فَمَا جَزَٰٓؤُهُۥٓ إِن كُنتُمْ كَٰذِبِينَ

(அதற்கு) அவர்கள், "நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளரும் அவருடன் இருந்தவர்களும் கேட்டார்கள்: “திருட்டுக் குற்றத்திலிருந்து நீங்கள் நிரபராதிகள் என்ற உங்கள் கூற்றில் நீங்கள் பொய்யர்களாக இருந்தால் அதனைத் திருடியவருக்கு உங்களிடத்தில் என்ன தண்டனை?”

75

قَالُوا۟ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِى رَحْلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ

அதற்குரிய தண்டனையாவது, "எவருடைய சமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்" என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.

யூஸுஃபின் சகோதரர்கள் அவர்களிடம் கூறினார்கள்: “யாருடைய பொதியில் திருடப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்படுகிறதோ அவர் அதற்குப் பகரமாக அடிமையாக்கப்படுவார் என்பதே எங்களிடமுள்ள திருடனுக்கான தண்டனையாகும். இவ்வாறு அடிமையாக்குவதன் மூலமே நாங்கள் திருடர்களைத் தண்டிக்கிறோம்.

76

فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسْتَخْرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِ ۚ كَذَٰلِكَ كِدْنَا لِيُوسُفَ ۖ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِى دِينِ ٱلْمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ نَرْفَعُ دَرَجَٰتٍۢ مَّن نَّشَآءُ ۗ وَفَوْقَ كُلِّ ذِى عِلْمٍ عَلِيمٌۭ

ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய கொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம்(சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!

அவர்களின் பொதிகளை சோதனையிட யூஸுஃபிடம் அவர்களை திருப்பி அழைத்துச் சென்றனர். தந்திரத்தை மறைப்பதற்காக அவர் தம் உடன் பிறந்த சகோதரனின் பொதியை விட்டு விட்டு தனது மற்ற சகோதரர்களின் பொதிகளைச் சோதனையிட ஆரம்பித்தார். பின்னர் தம் உடன் பிறந்த சகோதரனின் பொதியை சோதனையிட்டு அதிலிருந்து அரசனின் அளவுக் குவளையை கண்டெடுத்தார். இவ்வாறு யூஸுஃபிற்காக தந்திரம் செய்து அவருடைய சகோதரனின் பொதியில் அளவுக் குவளையை வைத்ததைப் போல, திருடியவரை அடிமையாக்கும் அவர்கள் நாட்டுத் தண்டனை மூலம் தனது சகோதரர்களைத் தண்டிக்க அவருக்கு நாம் மேலும் ஒரு திட்டம் தீட்டினோம். அடித்து அபராதம் விதித்து திருடனைத் தண்டிக்கும் அரசரின் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த விடயம் கைக்கூடியிருக்காது. அல்லாஹ் வேறொரு திட்டத்தை நாடினாலே தவிர. அதற்கு அவன் பேராற்றலுடையவன். நாம் யூஸுஃபின் அந்தஸ்தை உயர்த்தியதைப் போன்று நம் அடியார்களில் நாம் நாடியவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு அறிவாளிக்கும் மேல் அவரை விட அறிந்தவர் உண்டு. எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் அறிவு அனைவரின் அறிவையும் விட மேலானதாகும்.

77

۞ قَالُوٓا۟ إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌۭ لَّهُۥ مِن قَبْلُ ۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِى نَفْسِهِۦ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ أَنتُمْ شَرٌّۭ مَّكَانًۭا ۖ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ

(அப்போது) அவர்கள், "இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்" என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் "நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்" என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.

யூஸுஃபின் சகோதரர்கள் கூறினார்கள்: “இவர் திருடியிருந்தால், எந்த ஆச்சரியமும் இல்லை. இவருக்கு முன்னால் இவருடைய சொந்த சகோதரரும் திருடியிருக்கத்தான் செய்கிறார்.” இவ்வாறு அவர்கள் யூஸுஃபைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அவர்களின் இந்த வார்த்தையால் ஏற்பட்ட வலியை யூஸுஃப் மறைத்துக் கொண்டார். அதை அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை. தம் மனதுக்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டார்: “உங்களிடமுள்ள பொறாமையும் இதற்கு முன் நீங்கள் செய்த தீய செயலுமே இந்த இடத்தில் கெட்டதாகும். உங்களிடம் இருந்து வெளியாகும் இந்த அவதூறை அல்லாஹ் நன்கறிந்தவன்.

78

قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبًۭا شَيْخًۭا كَبِيرًۭا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُۥٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ

அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும், நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம்' என்று கூறினார்கள்.

யூஸுஃபின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறினார்கள்: “அரசரே! அவருக்கு அவரை மிகவும் நேசிக்கும் தள்ளாத வயதிலுள்ள தந்தை இருக்கிறார். அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை பிடித்துக் கொள்ளுங்கள். எங்களுடனும், மற்றவர்களுடனும் நீர் சிறந்த முறையிலேயே நடந்து கொள்பவராகவே நிச்சயமாக நாம் காண்கிறோம். எனவே அவ்வாறு செய்து எங்களுக்கு நன்மை செய்யுங்கள்.”

79

قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأْخُذَ إِلَّا مَن وَجَدْنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذًۭا لَّظَٰلِمُونَ

அதற்கவர், 'எங்கள் பொருறை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சமயாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

யூஸுஃப் கூறினார்: “அநியாயக்காரன் செய்த குற்றத்திற்காக குற்றமற்றவரைத் தண்டிக்கும் வகையில் தனது பொதியிலே அரசனின் அளவுக் குவளையை திருடாத ஒருவரை நாம் பிடித்து வைத்துக்கொள்வதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நாங்கள் அவ்வாறு செய்தால் குற்றவாளியை விட்டு விட்டு நிரபராதியைத் தண்டித்த அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.

80

فَلَمَّا ٱسْتَيْـَٔسُوا۟ مِنْهُ خَلَصُوا۟ نَجِيًّۭا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوٓا۟ أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُم مَّوْثِقًۭا مِّنَ ٱللَّهِ وَمِن قَبْلُ مَا فَرَّطتُمْ فِى يُوسُفَ ۖ فَلَنْ أَبْرَحَ ٱلْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِىٓ أَبِىٓ أَوْ يَحْكُمَ ٱللَّهُ لِى ۖ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ

எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலொசனை செய்தார்கள். அவர்களுள் பெரியவர் சொன்னார்; நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.

தமது வேண்டுகோளுக்கு யூஸுஃப் அளித்த பதிலால் அவர்கள் நம்பிக்கையிழந்த போது ஆலோசனை செய்வதற்காக மக்களை விட்டும் தனியே கூடினார்கள். அவர்களில் மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தை உங்களால் தவிரக்க முடியாத ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர தம் மகனை திரும்ப அழைத்து வரும்படி உங்களிடம் பெற்ற உறுதியான வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இதற்கு முன்னர் யூஸுஃபின் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவறிழைத்துள்ளீர்கள். என் தந்தை எனக்கு திரும்புமாறு அனுமதியளிக்கும் வரை அல்லது என் சகோதரனை விடுவிக்க அல்லாஹ் முடிவு செய்யும் வரை நான் எகிப்தை விட்டுச் செல்லமாட்டேன். அல்லாஹ் மிகச் சிறந்த முறையில் தீர்ப்பளிக்கக்கூடியவன். அவன் உண்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்கின்றான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.