Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 123

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

الٓر ۚ كِتَٰبٌ أُحْكِمَتْ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتْ مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ

அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.

(الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அல்குர்ஆன் வார்த்தையும் பொருளும் திறமையாக வடிவமைக்கபட்ட வசனங்களையுடைய ஒரு வேதமாகும். அதில் எவ்வித குறைபாட்டையும் நீர் காணமுடியாது. பின்னர் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை, ஏவல், விலக்கல், வாக்குறுதி, எச்சரிக்கை, சம்பவங்கள் ஏனையவை ஆகியன, தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, அடியார்களின் நிலமைகளையும் அவர்களுக்கு பலனளிப்பவற்றையும் குறித்து நன்கறிந்த (இறை)வனால் எடுத்துரைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

2

أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۚ إِنَّنِى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ وَبَشِيرٌۭ

நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். "நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்" (என்றும்).

முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வசனங்களின் உள்ளடக்கம்: “அல்லாஹ்வுடன் அவனைத் தவிர உள்ளவற்றையும் வணங்குவதை விட்டும் தடுப்பதாகும். -மனிதர்களே!- நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையை உங்களுக்கு அச்சமூட்டுபவனாகவும், நீங்கள் நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டால் அவனுடைய நற்கூலியைக் கொண்டு உங்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவனாகவும் நான் இருக்கின்றேன்.”

3

وَأَنِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى وَيُؤْتِ كُلَّ ذِى فَضْلٍۢ فَضْلَهُۥ ۖ وَإِن تَوَلَّوْا۟ فَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍۢ كَبِيرٍ

"நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்பகிறேன்" (என்றும்).

மக்களே!- உங்கள் இறைவனிடம் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருங்கள். அவன் விடயத்தில் நீங்கள் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு அவன் பக்கம் திரும்புங்கள். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணைகள் வரை அவன் உங்களை நல்ல முறையில் அனுபவிக்கச் செய்வான். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிந்த ஒவ்வொருவருக்கும் அவன் குறைவின்றி நிறைவாக தன் அருளை வழங்கிடுவான். நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததன் மீது நம்பிக்கை கொள்ளாமல் நீங்கள் புறக்கணித்தால் உங்கள் மீது பயங்கரமான நாளான மறுமை நாளின் வேதனையைக் குறித்து அஞ்சுகிறேன்.

4

إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ

"அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வரவேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்" (என்றும் நபியே! நீர் கூறுவீராக).

மக்களே! மறுமை நாளில் நீங்கள் அல்லாஹ் ஒருவனின் பக்கமே திரும்ப வேண்டும். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. எனவே உங்களை உயிர்ப்பிப்பதும் நீங்கள் மரணித்து உங்களை எழுப்பிய பின் விசாரணை செய்வதும் அவனால் இயலாத காரியமல்ல.

5

أَلَآ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا۟ مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

"அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து ) மறைத்துக் கொள்வதற்காககத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்" (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!

அறிந்து கொள்ளுங்கள், இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றிய அறியாமையினால் ஏற்பட்ட தமது உள்ளங்களில் உள்ள அவனைப் பற்றிய சந்தேகத்தை மறைக்க தமது நெஞ்சுகளை வளைக்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்கள் தங்களின் தலைகளை ஆடைகளால் மறைக்கும் போது அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். உள்ளங்களிலுள்ள எண்ணங்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.

6

۞ وَمَا مِن دَآبَّةٍۢ فِى ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّۭ فِى كِتَٰبٍۢ مُّبِينٍۢ

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் எந்த படைப்பினமானாலும் அதற்கு வாழ்வாதாரம் அளிக்கும் பொறுப்பை தானாகவே விரும்பி அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அது பூமியில் தங்குமிடத்தையும் மரணிக்கும் இடத்தையும் அல்லாஹ் அறிவான். படைப்புகள் ஒவ்வொன்றும், அவற்றிற்கான வாழ்வாதாரங்களும் அவை தங்குமிடங்களும் மரணிக்கும் இடங்களும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.

7

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًۭا ۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِنۢ بَعْدِ ٱلْمَوْتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

அவன்தான் பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் அவையிரண்டிலும் உள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். அவையிரண்டையும் படைப்பதற்கு முன்னால் அவனுடைய அர்ஷ் நீரின் மீதிருந்தது. -மனிதர்களே!- உங்களில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நற்செயல்கள் புரிபவர்கள் யார்? அவனுக்குக் கோபமுண்டாக்கும் தீய செயல்கள் புரிபவர்கள் யார்? என்பதை சோதிப்பதற்காகத்தான் அவற்றைப் படைத்தான். ஒவ்வொருவருக்கும் அவன் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- “மக்களே, நீங்கள் மரணித்த பிறகு விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் அல்லாஹ்வை நிராகரித்து மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்தவர்கள் கூறுவார்கள், “நீர் ஓதிக் காட்டும் குர்ஆன் தெளிவான சூனியமும் அசத்தியமுமாகும்.”

8

وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِلَىٰٓ أُمَّةٍۢ مَّعْدُودَةٍۢ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُۥٓ ۗ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் "அதைத் தடுத்தது யாது?" என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள். அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

இவ்வுலக வாழ்வில் இணைவைப்பாளர்களை விட்டும் அவர்களுக்குரிய வேதனையை குறிப்பிட்ட காலம் வரை நாம் பிற்படுத்தினால், அவசரப்பட்டவர்களாகவும் பரிகாசம் செய்தவர்களாகவும் அவர்கள், “நம்மை விட்டும் வேதனையைத் தடுப்பது எது?” அறிந்துகொள்ளுங்கள், எனக் கூறுவார்கள். அவர்களுக்குரிய வேதனை வருவதற்கு அல்லாஹ்விடம் ஒரு நேரம் உண்டு. அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் அதனை அகற்றும் எவரையும் அவர்கள் பெறமாட்டார்கள். அது அவர்கள் மீது நிகழ்ந்தே தீரும். அவர்கள் பரிகாசமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிட்டது.

9

وَلَئِنْ أَذَقْنَا ٱلْإِنسَٰنَ مِنَّا رَحْمَةًۭ ثُمَّ نَزَعْنَٰهَا مِنْهُ إِنَّهُۥ لَيَـُٔوسٌۭ كَفُورٌۭ

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து, பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.

நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடையை வழங்கி பின்னர் அந்த அருட்கொடையைப் பறித்துக் கொண்டால் அல்லாஹ்வின் அருளை விட்டும் அவன் மிகவும் நம்பிக்கையிழந்தவனாகவும், அவனுடைய அருட்கொடைகளுக்கு மிகவும் நன்றி கெட்டவனாகவும் ஆகிவிடுகிறான். அந்த அருட்கொடையை அல்லாஹ் அவனிடமிருந்து பறித்துக்கொண்டால் அதனை மறந்து விடுகிறான்.

10

وَلَئِنْ أَذَقْنَٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّىٓ ۚ إِنَّهُۥ لَفَرِحٌۭ فَخُورٌ

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், "என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன" என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.

அவனுக்கு ஏற்பட்ட வறுமைக்கும் நோய்க்கும் பிறகு அவனது வாழ்வாதாரத்தில் விசாலத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கினால், “தீங்கு என்னை விட்டு அகன்று விட்டது, துன்பம் என்னை விட்டு நீங்கி விட்டது” என்று கூறுகிறான். அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை. பெருமிதம் கொள்பவனாகவும் அல்லாஹ் தனக்கு அளித்த அருட்கொடைகளைக் கொண்டு மக்களை அதிகம் அவமதிப்பவனாகவும் பெருமை பேசித் திரிபவனாகவும் இருக்கின்றான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.